தேனி, ஆக.31: தேனி-அல்லிநகரம் நகர்மன்ற அவசரக் கூட்டம் தேனி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்திற்கு தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகர் மன்ற துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின்போது, தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.
இதில் 7 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாகவும், 26 வார்டுகளில் பகுதியாகவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விடுபட்ட மற்றும் விரிவாக்க பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ.67 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் மூலம் ரூ. 16 கோடியே 60 லட்சம் கடன் பெறுவதற்கும், ரூ.50 கோடியே 63 லட்சம் மானியம் பெறுவதற்கும் ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இததீர்மானமானது அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.