தேனி, நவ. 22: தேனி அருகே வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வழுக்குப்பாறையில் நின்று செல்பி எடுத்த வாலிபர் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். தேனி நகரில் உள்ள சிவராம் நகரில் குடியிருப்பவர் குமார் மனைவி காளீஸ்வரி. இவரது மகன் சதீஷ்குமார் (23). சதீஷ்குமார் தேனியில் உள்ள ஒரு வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் மற்றும் இவரது நண்பர்கள் சிலருடன் தேனி அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோயிலுக்கு சென்றனர்.
பின்னர் கோயிலுக்கு மேற்கே மலைப்பகுதியாக உள்ள வனப்பகுதிக்கு சதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் சென்றனர். அங்கே உள்ள ஒரு வழுக்கு பாறை பகுதிக்கு சென்றநிலையில், வழுக்கு பாறை பகுதியில் சதீஷ்குமார் நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார். அப்போது கால்தவறி வழுக்கி விழுந்தார். இதில் ஒரு பாறையின் இடுக்கில் உள்ள தண்ணீரில் மூழ்கினார்.
இவருடன் சென்ற நண்பர்கள் இவரை மீட்க போராடியும் முடியாத நிலையில் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்த வாலிபரின் பிரேத உடலை மீட்டனர். இதுகுறித்து காளீஸ்வரி அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.