உறவினர்கள் சாலை மறியல்
தேனி, ஜூலை 2: பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் டூவீலர் மோதியதில் வாலிபர் பலியானது சம்பந்தமாக வாலிபரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே கைலாபட்டியை சேர்ந்தவர் விஜயக்குமார்(43), இவர் நேற்று முன்தினம் டூவீலரில் வந்தபோது, கைலாசபட்டியில் உள்ள திண்டுக்கல்-தேனி மாநில நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
விஜயக்குமார் உயிரிழந்தது குறித்து அறிந்த உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால்தான் விபத்து ஏற்பட்டதாக கருதி விபத்துக்கு காரணமான வாகனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்த விஜயக்குமாரின் பிரேத உடலை பிரேத பரிசோதனைக்கு பெரியகுளம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவ்விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.