தேனி, ஜூன் 11: தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக, வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். தேனி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பாக நேற்று, தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு வழக்கு சம்பந்தமாக சென்ற பெண் வழக்கறிஞரை காவல் உதவி ஆய்வாளர் அவமதித்ததை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், இணை செயலாளர் லோகநாதன், அரசன், செல்வக்குமார், ஆனந்தன், ரதிதேவி, வித்யா, பிரியங்கா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி நேற்று பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி நீதிமன்றங்களையும் வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.