தேனி, ஜூன் 25: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் திருநங்கைகளுக்கு நலவாரிய அட்டை, கலைக்குழுவினருக்கான கலைக்கருவிகள், தொழிற்பயிற்சி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் காப்பீட்டு அட்டை கோருதல் உள்ளிட்ட 28 மனுக்களை திருநங்கைகள் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் அளித்தனர்.
இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உரிய துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை ஒரு திருநங்கைக்கும், விரிவான மருத்துவக் காப்பீடு அட்டையினை ஒரு திருநங்கைக்கும், அவர் வழங்கினார்.