வேதாரண்யம், ஜூலை 17: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி எஸ்கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, இலக்கிய மன்ற தொடக்க விழா, வாசித்தல் பயிற்சி தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவகுமார் வரவேற்றார்.
6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி, பாட்டுப்போட்டி என ஐந்து தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் புஷ்பவனம் கவிஞர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை தமிழாசிரியர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். இளவரசன் நன்றி கூறினார்.