திண்டுக்கல், ஜூன் 7: திருச்செங்கோட்டில் 25வது தேசிய சப் ஜூனியர் வூசு போட்டி நடைபெற்றது. இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 1600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சண்டை பிரிவு, பாடப்பிரிவு, ஆயுத பிரிவு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. தமிழக அணி சார்பில் பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 7 மாணவர்கள், 8 மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் 4 தங்கப்பதக்கம், 4 வெள்ளி பதக்கம், 8 வெண்கலம் பதக்கம் பெற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதுடன், தமிழ்நாடு அரசின் ஹைகேஷ் மூலம் உதவித்தொகை பெறவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்ற வீரர்கள், பயிற்சியாளருக்கு அகில இந்திய சங்கத்தின் சிஇஓ சுஹெய்ல் அகமது, இன்டர்நேஷனல் ஜட்ஜ் பஹேரா, மாநில செயலளர் ஜான்சன், பொருளாளர் கவிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.