சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரசில் இருந்து பாஜவில் இணைந்ததும், நடிகை குஷ்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். எனினும், கட்சியில் தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து இருந்தார். ஆனால், அவருக்கு பெரிய பதவி எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தனக்கு கட்சியில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகை குஷ்பு அவ்வப்போது தனது குமுறல்களையும் வெளிப்படுத்தி வந்தார். மேலும், கட்சி தொடர்பான ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவருக்கு பாஜவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘மம்தா குமாரி, தெலினா காங்டுப், குஷ்பு சுந்தர் ஆகிய 3 பேரும் தேசிய பெண்கள் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) உறுப்பினர்களாக நியமிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இவர்கள் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அல்லது மறு உத்தரவு வரை பதவியில் நீடிப்பர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தனது டிவிட்டரில் நடிகை குஷ்பு, ‘‘என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசுக்கு மிக்க நன்றி. உங்களின் தலைமையின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உரிமைகளை பெற்று தரவும் கடின உழைப்பை செலுத்துவேன். இந்த பதவியில் என்னுடைய பணிகளை தொடங்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில், ‘‘குஷ்புவிற்கு, பாஜ சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இது அவருடைய இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் பெண்கள் உரிமைக்கான போராட்டம் ஆகியவற்றுக்காக கிடைத்த அங்கீகாரம்’’ என்று பதிவிட்டுள்ளார். இதே போல நடிகை குஷ்புவுக்கு, ஏராளமான பாஜவினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்….