விருதுநகர், ஜூலை 23: தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து ஆர்.ஆர்.நகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் அனைத்து கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து சங்க தலைவர் காளிராஜ் தலைமையில் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அனைத்து கடைகளுக்கும் ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் ஆக்கிரமிக்கப்பட்ட இட அளவு எவ்வளவு என்ற அளவீடு செய்து குறியீடு செய்யாமல் ஆக்கிரமிப்பு என கூறியிருப்பதை கண்டித்தும், கால அவகாசம் அளிக்காமல் நோட்டீஸ் ஒட்டியதை கண்டித்தும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.