காரைக்குடி, ஜூன் 8: தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தமிழக அளவில் 3வது இடத்தை பெற்றுள்ளது என துணைவேந்தர் ஜி.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘‘ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (என்.ஐ.ஆர்.எப்) கடந்த 2016ம் ஆண்டு முதல் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இத்தரவரிசையில் 8வது முறையாக 2023ம் ஆண்டிற்கு நடத்தப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்குள் 30வது இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் 3வது இடத்தை பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகம் தேசிய தர நிர்ணய குழுவால் வழங்கப்பட்ட ஏ பிளஸ் அங்கீகாரம். க்யூஎக்ஸ் தரவரிசையில் ஆசிய அளவில் 251 முதல் 260 இடம். உயர் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 401 முதல் 500 இடம். டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட இளம் பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசையில் 138வது இடம். ஆசிய அளவில் பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசையில் 122வது இடம் பெற்றுள்ளது. இந்த உயரிய தரவரிசையில் பல்கலைக்கழகத்தை இடம்பெற செய்த பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி, முதுகலை மாணவர்களை துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி பாராட்டினார்.