காரைக்குடி, ஆக. 18: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜி.ரவி கூறியதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (என்.ஐ.ஆர்.எப்) கடந்த 2016 முதல் பல்கலைக்கழங்களுக்கு இடையேயான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. கற்பித்தல் மற்றும் கற்பதற்கான வளங்கள். ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் தேர்வு முடிவுகள், சர்வதேச வெளிப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், கருத்து கணிப்புகள் என 5 காரணிகளின் கீழ் மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தி வருகிறது.
மேலும் ஆராய்ச்சி வெளியீடுகளில் அதிகமான மேற்கோள்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த என்.ஐ.ஆர்.எப் தரவரிசைப் பட்டியலில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக தரவரிசை பிரிவின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் அவரது குழுவினர் 2024ம் ஆண்டுக்கான தரவிகளை பல்வேறு துறைகள் மற்றும் நிர்வாக பிரிவுகளிடம் இருந்து சேகரித்து சமர்ப்பித்திருந்தன. இதில் இந்திய பல்கலைக்கழக வரிசையில் முதல் 100 இடங்களில் 47ம் இடத்தையும், உயர்கல்வி நிறுவன தரவரிசையில் முதல் 100 இடங்களில் 76ம் இடத்தையும், மாநில பொதுப்பல்கலைக்கழக தரவரிசையில் 17ம் இடத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.