மதுரை, நவ.1: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள், தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி மதுரை அஞ்சல் துறை சார்பில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முதல் மதுரை காந்தி மியூசியம் வரை ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென் மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் சரவணன் தலைமை வகித்தார். மதுரை கோட்ட முதுநிலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல அளவில் நடந்த ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மதுரை காந்தி மியூசியத்தில் தேசிய ஒற்றுமை தின விழா நடந்தது. காந்தி மியூசியம் மற்றும் தியாகராசர் கல்லூரி சார்பில் நடந்த விழாவிற்கு காந்தி மியூசியத்தின் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மியூசியத்தின் கல்வி அலுவலர் மற்றும் காப்பாட்சியர் ஆர்.நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் ஆகியோர் பேசினர். முன்னதாக கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மலர்விழி மங்கையர்க்கரசி அறிமுகவுரை நிகழ்த்தினார். தேசிய மாணவர் படை தலைவர் அருண் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். மாணவி ஸ்வேதா வரவேற்றார். நிறைவாக மாணவர் விகாஸ் நன்றி கூறினார்.