சேலம், ஜூன் 10: சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில், ₹644.86 கோடியிலான 43,514 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், கடந்த 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்துடன், ஆண்டுக்கு 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இதனால் இத்திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம், நாடு முழுவதும் சுமார் 6 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம், ஆண்டுதோறும் 2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. அதேசமயம், மாநிலங்களுக்கு மாநிலம் இந்த ஊதிய உயர்வு வேறுபடுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, 2022-23 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ₹281 வழங்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 2023-24 நிதி ஆண்டுக்கு ₹294 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளும், நீர்வழிப்பாதைகளும் இத்திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விவசாய பணிகளுக்கும் இத்திட்ட பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில் ₹644.86 கோடியிலான 43,514 பணிகள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். நீர்நிலைகள் தூர்வாருதல் மட்டுமின்றி, பல்வேறு பணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிமெண்ட் கான்கிரீட் பாதை அமைத்தல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டுதல், ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல், ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுதல், சமுதாய கிணறு அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், பேவர் பிளாக் அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல் தனிநபர் உறிஞ்சு குழி அமைத்தல், சமுதாய உறிஞ்சு குழி அமைத்தல் பணிகள் நடக்கிறது. இதேபோல், நீர்வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காகவும் தடுப்பணை கட்டுதல், கல்கரை அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், மண்கரை அமைத்தல், கசிவுநீர் குட்டை அமைத்தல், சங்கன் குளம் அமைத்தல், மாட்டுக்கொட்டகை கட்டுதல், ஆட்டுக்கொட்டகை கட்டுதல், அமிர்தகுளம் அமைத்தல் போன்ற பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்படுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த 2020-21ம் ஆண்டு முதல் 2022-2023ம் ஆண்டு வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ₹1.031.53 கோடி மதிப்பிலான 58,310 பணிகள் மேற்கொள்ள எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், தற்போதுவரை 43,514 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ₹644.86 கோடியாகும். இதுதவிர ₹386.66 கோடி மதிப்பிலான 14,796 பணிகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.