திருப்பூர், ஆக.1: திருப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில், வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் பரிசு வழங்கினார். தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாணவர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, முத்தம்மாள் நினைவு கோப்பைக்கான தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள குலாலர் திருமண மண்டபத்தில் கடந்த 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. நேற்று மாலை இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவுக்கு திமுக நிர்வாகி திலக்ராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதலிடம் பிடித்த சென்னை வீரர் அசோக்குமாருக்கு கோப்பையுடன் ரூ.30 ஆயிரம், 2-வது இடம் பிடித்த சென்னை வீரர் அருண்கார்த்திக்கு கோப்பையுடன் ரூ.15 ஆயிரம், 3-வது இடம் பிடித்த திருப்பூர் வீரர் தங்கராஜூக்கு கோப்பையுடன் ரூ.10 ஆயிரம், 4-வது இடம் பிடித்த ஈரோடு வீரர் அருணுக்கு கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத், பகுதி செயலாளர் போலார் சம்பத், வட்டச் செயலாளர் நித்யானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.