காரிமங்கலம், ஜூன் 18: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகிறது. முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்றுமுன்தினம் கூடிய சந்தைக்கு காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், குடிமேன அள்ளி, தட்ரஅள்ளி, செல்லம்பட்டி, அகரம், நாகரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் சுமார் 1.25 லட்சம் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, வடமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர்.
கடந்த வாரத்தை காட்டியும் நேற்றை சந்தைக்கு கூடுதலாக தேங்காய் வரத்து இருந்தது. அளவை பொறுத்து தேங்காய் ஒன்று ரூ.13 முதல் ரூ.23 வரை விற்பனையானது. வரத்து அதிகரித்த போதிலும், விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆனால் விலை சற்று உயர்ந்தது. சந்தையில் சுமார் ரூ.12 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை நடந்தது. திருமண முகூர்த்த நாட்கள், பண்டிகை இல்லாததால், சந்தையில் நேற்று தேங்காய் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.