திருப்பூர், ஜூலை 7: இளநீர் அருந்துவது வெயில் காலத்தில் மட்டுமல்லாது உடல் சூட்டை குறைப்பதற்காக அனைத்து காலங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அருந்தக்கூடிய பானமாக இருந்து வருகிறது. திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு,கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.கடந்த சில தினங்களாக தேங்காய், கொப்பரை விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் இளநீர் பறிப்பதை நிறுத்தி தேங்காய் அறுவடைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இளநீரை விட தேங்காய் விலை அதிகம் விற்பனையாக கூடிய நிலையில் இளநீர் பறிப்பது நிறுத்தப்பட்டதால் திருப்பூருக்கு வரும் இளநீர் வரத்து குறைந்தது
அதே நேரத்தில் தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் இவை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மழைப்பொழிவு குறைந்தது மற்றும் இயற்கை சூழல் காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் பிடிப்பது குறைந்ததன் காரணமாக, வரத்து குறைந்திருப்பதாகவும் அதன் காரணமாக விலை அதிகரித்து இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.