அரூர், ஜூலை 18: ஆடி பிறப்பையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினர். குழந்தைகள் குதூகலத்துடன் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். தமிழகத்தில் ஆடி மாத பிறப்பான 1ம் தேதியன்று தேங்காய் சுடும் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடும்பத்தோடு தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினர். தேங்காயை தரையில் நன்கு தேய்த்து எடுத்து, அதிலுள்ள மூன்று கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு, அதற்குள் எள், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை, அவல் உள்ளிட்டவற்றை பரப்பி, அழிஞ்சி மரக்குச்சியில் சொருகி நெருப்பில் வாட்டியெடுத்தனர். நன்றாக ஆறியதும், தேங்காயை உடைத்து, அந்த சேர்மானத்தை அருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு கொண்டு சென்று படைத்து படையலிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி உண்டு மகிழ்ந்தனர். அரூர் பகுதியில் கடைவீதி, கச்சேரிமேடு உள்ளிட்ட இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாதுகாப்புடன் குழந்தைகள் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். தேங்காய் சுடும் பண்டிகையால் அரூர் பகுதி களை கட்டியது.