திருச்செங்கோடு, ஜூலை 18: திருச்செங்கோடு பகுதியில் ஆடி மாத பிறப்பை ஒட்டி, தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முற்றிய தேங்காயின் கண்களை திறந்து, அதிலுள்ள நீரை அகற்றி, பொட்டுக்கடலை, பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, கூராக சீவப்பட்ட அழிஞ்சி மரக்குச்சியில் தேங்காயை சொருகி தீயில் வாட்டினர்.
பின்னர், விநாயகருக்கு தேங்காயை படையலிட்டு, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, சுட்ட தேங்காயை உறவினர்களுக்கு கொடுத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
அதேபோல் ஆடி மாத பிறப்பு மற்றும் அமாவாசையை முன்னிட்டு, மல்லசமுத்திரம் தெப்பக்குளம் பகுதியில் பொதுமக்கள் கூடி தெருவில் தேங்காய் சுட்டு, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.