கூடலூர், ஜூன் 6: இடுக்கி மாவட்டம், குமுளி மன்னாக்குடியை சேர்ந்த அரியனின் மகன் அர்ஜூன் (17) என்பவர் நேற்று முன்தினம் மாலை தேக்கடி ஏரியில் குளிக்க சென்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக உடன் சென்ற நண்பர்கள் கூறினர். இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவிலிருந்து அவரைத் தேடும் பணி முடக்கி விடப்பட்டது. நேற்று தேக்கடியில் தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் சட்ரஸ் அருகே, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அர்ஜூன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் மதகை அடைத்தால் மட்டுமே சடலத்தை மீட்க முடியும் என்ற நிலையில் ,
மீட்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று மாலை 2.30 மணி முதல் தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்தனர். இதனால் தமிழகப் பகுதிக்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. அதன் பின்பு கேரளா போலீசார், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் உதவியுடன் நேற்று மாலை 4 மணிக்கு மேல் அர்ஜூன் சடலத்தை மீட்டனர். சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மாலை 4:30 மணி முதல் தமிழகப் பகுதிக்கு வழக்கம் போல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.