Saturday, June 10, 2023
Home » தெலங்கானா பவர்புல் பெண்மணியை அலற வைத்த மாநில விவிஐபியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

தெலங்கானா பவர்புல் பெண்மணியை அலற வைத்த மாநில விவிஐபியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘‘கால்ல விழும் கலாச்சாரத்தின் மேல் சேலம் விஐபிக்கு ரொம்பவே விருப்பம் போலிருக்கே… அதனால்தான் தொண்டர்களை புறக்கணித்தாரா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் நடந்த இலைக்கட்சியின் முன்னாள் நிர்வாகி இல்லத்து விழாவிற்கு வந்த சேலத்துக்காரர், முன்னதாக பூட்டு மாவட்ட சுற்றுலா மாளிகையில், கட்சியின் 2 மாஜி மந்திரிகளை சந்தித்துப் பேசினார். அவர், தங்கியிருந்த இடத்துக்கு அருகே மேடை தயாராக இருந்ததாம். அதனால, சேலம் விவிஐபி மேடையில் ஏறி ஆவேசமாக பேசுவார் என்று தொண்டர்கள் காத்திருந்தார்களாம். ஆனால், சேலம்காரரை மடைமாற்றிய இலை கட்சியின் மாஜி அமைச்சர்கள் தங்களின் அரசியல் வாரிசுகள், மொழியென முடியும் மக்கள் பிரதிநிதியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாராம். அத்துடன் தொண்டர்கள் காத்திருப்பதையே மறந்துவிட்டாராம். காரணம், பலர் சேலத்துக்காரர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதும், அவரது ஆதரவாளர்களை அறிமுகப்படுத்துவதிலுமே குறியாக இருந்தார்களாம். காலில் விழுந்து ஆசி பெற்றவர்களை பார்த்த சந்தோஷமாம் இது. இதுலயே நீண்ட நேரம் கழிந்ததால், சேலத்துக்காரரை பார்க்க வந்த பல முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் காத்திருந்து கடைசியில் டென்ஷன் ஆகி, காலில் விழுந்து எழுவதை சேலம்காரர் ரொம்பவே விரும்புகிறார் போல… இவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதால் எல்லாம், எல்லோரும் போயஸ்கார்டன் மம்மி ஆகிவிட முடியாது என்று சிலாகித்து கொண்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மொழிப்போர் தியாகிகள் நாளில் தொண்டரால் வறுத்தெடுக்கப்பட்ட தலைவர் யாரு…’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவிலில் இலை கட்சி சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் கரை வேட்டி கட்டாமல், பேன்ட், சட்டையில் வந்த மாவட்ட நிர்வாகியை, மேடையில் வைத்தே தொண்டர் ஒருத்தரு, வார்த்தையால் துளைத்தெடுத்து நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தாராம். அதிமுகவை சேர்ந்தவர் என்றாலும் இன்னும் அந்த நிர்வாகி கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பிலும் இருக்கிறார். அரசு காரில் தான் வலம் வந்து கொண்டு இருக்கிறார். கட்சி நிகழ்ச்சிக்கு வரும் போது கூட இவர் கரை வேட்டி கட்டுவதில்லையாம். பேன்ட், சட்டையில் தான் வருவாராம். இதை நோட்டமிட்ட தொண்டர், பொதுக்கூட்ட மேடையில் அழகான எம்.எல்.ஏ. பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கே பாய்ந்து, நீங்கள் கட்சி கரை வேட்டி கட்டி இருக்கிறீங்க. நான் கட்டி இருக்கேன். முன்னாள் அமைச்சர் கிரீன் கட்டி இருக்காரு. இவரு ஏன், கட்சி கரை வேட்டி கட்ட வில்லை என மேடையில் முதல் வரிசையில் இருந்த அந்த மாவட்ட முன்னணி நிர்வாகியை கேட்க, எம்.எல்.ஏ.வாலும் பதில் சொல்ல முடிய வில்லையாம். இலை கட்சி தொண்டர்கள் பலம் கொண்ட கட்சி என்பது இப்போது புரிகிறதா என அந்த நிர்வாகியை மறைமுகமாக கண்டித்த அழகான எம்.எல்.ஏ., நாசுக்காக பேசி, தொண்டரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாராம்… அசிங்கப்பட்ட அந்த இலை கட்சிக்காரர் விட்டால் போதும் என்று காரில் ஏறி பறந்துட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பவர்புல் பெண்மணியின் ‘பவரை’ பிடுங்கிய விவிஐபி பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாட்டின் 74வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், இரண்டு மாநில பொறுப்பை வகிக்கும் பவர்புல் பெண்மணி, மன உளைச்சலில் இருந்தாராம். குடியரசு தின விழாவில் மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கம். அதன்படி, இரண்டு மாநிலங்களில் ஆளுநர் பொறுப்பை கவனிக்கும் பவர்புல் பெண்மணி முதலில் தெலங்கானாவில் நேற்று காலை தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் இந்த நிகழ்வை அம்மாநில விவிஐபி புறக்கணித்தார். பவர்புல் பெண்மணியாக தெலங்கானாவில் பொறுப்பேற்றது முதல், அம்மாநில விவிஐபியுடன் மோதல் போக்கு கடைபிடித்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டாக குடியரசு தினவிழாவை விவிஐபி புறக்கணித்து வருகிறாராம். இதனால் பெரிய அளவில் மக்கள் நலத்திட்டங்களை வழங்க முடியாமல் பவர்புல் பெண்மணி தவித்து வருகிறாராம். தெலங்கானாவில் தான் இப்படி நடக்கிறதே, புதுவை மாநிலத்துக்கு சென்று கொடியேற்றுவோம் என அவசர அவசரமாக விமான நிலையத்துக்கு சென்ற பவர்புல் பெண்மணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பனிப்பொழிவால் வானிலை மோசமாக இருப்பதால் ஒரு மணி நேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஒருவழியாக ஒரு மணி நேரம் தாமதத்துடன் புதுவைக்கு வந்து தேசிய கொடியேற்றி வைத்து அரசின் நலத்திட்டங்களை வழங்கினாராம். பின்னர் தேனீர் விருந்தில், தெலங்கானாவில் தான் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. புதுச்சேரிக்கு நேரத்துக்கு சென்று கொடியேற்றுவோம் என்றால் வானிலையும் பழிவாங்கி விட்டது என புல்லட் சாமி, அவரது சகாக்களிடம் கூறி புலம்பினாராம். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, மனஉளைச்சலில் இருப்பதை காட்டிக் கொண்டு தன் மாளிகை நோக்கி போய்விட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வெயிலூர்ல கல்வி துறை அதிகாரியின் செயல்பாடுகளை பார்த்து கீழே பணியாற்றும் ஆசிரியர்கள் டென்ஷனில் இருக்காங்களாமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல கல்வித்துறையில தற்போது பொறுப்புல இருக்கிற கிராமத்து சாமி பேரை கொண்டவரு, வந்து ரெண்டு வருஷத்துக்கு மேலாகியும் மாவட்டத்து மேலே பற்றே இல்லாம பட்டும் படாமத்தான் இருக்கிறாராம். அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது. இதுல கலைத்திருவிழா, அறிவியல், கண்டுபிடிப்பு, விளையாட்டு போட்டிகள்னு அரசுப்பள்ளி மாணவருங்க கலக்கிட்டு வர்றாங்களாம். அவங்கள ஊக்கப்படுத்துற மாதிரி எதுவுமே செய்யறதில்லையாம். பள்ளி தலைமை ஆசிரியருங்க போயி அவரை பார்த்து பசங்களுக்கு சான்றிதழ், பரிசு கொடுக்கலைனு சொன்னா, ‘போயி வேலையை பாருய்யானு’ ஒருமைல பேசி அனுப்புறாராம். அதோட ஒங்க மாவட்டம், ஒங்க மாவட்டம்னு பிரிச்சு ஏளனமா பேசறாராம். இவரை வச்சுக்கிட்டு பொதுத்தேர்வுல எப்படி கடைசி இடத்துல இருந்து மேலே வர்றதுனு தெரியலையேனு அரசுப்பள்ளி ஆசிரியருங்க புலம்புறாங்க…’’ என்றார் விக்கியானந்தா….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi