நாகப்பட்டினம், மே 20: தெற்கு பொய்கை நல்லூர் சிஎஸ்ஐ தேவாலயத்தை சீரமைக்க ரூ.15 லட்சம் நிதி உதவியை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். நாகை மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூரில் சிஎஸ்ஐ பேப்டிஸ்ட் தேவாலயம் உள்ளது. 1845ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆலயத்தில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக மாநில சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நிதிஉதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நாகை மாவட்டத்தின் பழமையான தேவாலயங்களில் தெற்கு பொய்கைநல்லூர் தேவாலயமும் இடம்பெற்றுள்ளதால், இதனை நல்ல முறையில் சீரமைக்க அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் முதற்கட்டமாக 75 சதவீதம் தொகை அதாவது ரூ.15 லட்சத்திற்கான காசோலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிதி உதவிக்கான காசோலையினை கலெக்டர் ஆகாஷ் நேற்று தேவாலயத்தின் செயலாளர் பவுல்ராஜ், போதகர்கள் பிரபாகர், சாம் நியூபிகின் ஆகியோரிடம் வழங்கினார்.