ராதாபுரம், ஜூலை 10: நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138வது ஆண்டு பெருவிழா வருகிற 27ம்தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக அதிகாலை 5.15 மணிக்கு ஹெலன் ப்ளாரிட்டி மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கள்ளிகுளத்தைச் சேர்ந்த குருவானவர்கள் அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ஜெபம் செய்து அர்ச்சிக்கிறார்கள். தொடர்ந்து கோயில் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார். பின்னர் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 7.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலி நடைபெறுகிறது. ஆகஸ்டு 2ம்தேதி 7ம் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு மாதா காட்சி கொடுத்த மலைகெபியில் சிறப்பு திருப்பலியும், இரவு சென்னை களிகை சங்கத்தினர் சார்பில் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. 3ம்தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறும் திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்குகிறார்.
மாலை 6.30 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது. ஆக.4ம்தேதி 9ம் திருவிழாவில் காலையில் திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், நள்ளிரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேர் ரதவீதிகளில் சுற்றி வந்து அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்து சேர்கிறது. 5ம்தேதி 10ம் திருவிழாவில் அதிகாலை 5.15 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், 7.30 மணிக்கு பங்குதந்தை ஜெரால்டு ரவி தலைமையில் திருமுழுக்கு திருப்பலியும், 9.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 11.30 மணிக்கு குணமளிக்கும் நற்கருணை வழிபாடும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு முதல் சனி திருப்பலியும் நடக்கிறது. 6ம்தேதி காலை 7.30 மணிக்கு தமிழ், மலையாளத்தில் நன்றி திருப்பலியும், 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குதந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குதந்தை வளன் ரசு மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.