Sunday, June 4, 2023
Home » தெரு மண்ணை திருநீறாக்கிய வாலகுரு சன்னியாசி

தெரு மண்ணை திருநீறாக்கிய வாலகுரு சன்னியாசி

by kannappan
Published: Last Updated on

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அடுத்துள்ளது குப்பக்குறிச்சி. இங்கு சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தவர் பாலாங்கோனார். இவருடைய குலதெய்வம் பால் உடையார் சாஸ்தா. சாஸ்தாமீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார் பாலாங்கோனார். அவரைப்போலவே அவரது மனைவி கோமதியும் தெய்வபக்தியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர்களுக்கு இரண்டாவது மைந்தனாக சிவனருளோடு, ஆடி மாதம் 18ம் தேதி பௌர்ணமி அன்று பாலகன் பிறந்தான். அவனுக்கு மாசானம் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இவர்களுக்கு நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் உண்டு. அவற்றை பாலாங்கோனாரும், இரண்டாவது மைந்தன் மாசானமும் பார்த்து வந்தனர்.ஆடு கிடை உள்ளூரிலேயே அமைத்திருந்தாலும், ஆடுகளை மேய்ச்சலுக்காக பக்கத்து ஊரான சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிக்கு கொண்டு செல்வார்கள். ஒரு முறை பாலாங்கோனாருக்கு காட்டுஉடை முள் குத்தி  அடியெடுத்து வைக்க முடியாத நிலை ஏற்பட, ஆடு மேய்க்க ஆள் இல்லையே என்கிற நிலை வர, ‘‘அதற்கு என்னப்பா…! நான் மேய்க்கப் போகிறேன்’’ என்றான் பன்னிரெண்டு வயதே ஆன பாலகன் மாசானம்.எப்படி இந்த சின்ன வயது பிள்ளையை நம்பி நூற்றுக்கணக்கான ஆடுகளை ஒப்படைக்க என்று எண்ணிய அவரது எண்ணத்திற்கு பதிலளிக்கும் வகையில் மைந்தன் மாசானம் சொன்னான் ‘‘அப்பா நான் மேய்ச்சு கிடையில் அடைப்பேன் உருப்படி (ஆடுகளை இவ்வாறு அவர்கள் சொல்வதுண்டு) ஒண்ணும் குறையாம பார்த்துக்குவேன் என்றான். அதற்கு அவனது தாய் கோமதியும், “நம்ம புள்ளய நம்புங்க, நம்ம சாஸ்தா துணைக்கு போவாரு’’ என்று உறுதி கூற, ‘‘உருப்படிகளை பார்த்துக்கய்யா அந்த கருமால்குட்டி, கராபோரு, கொம்புசுத்தி, நரையாடு, செந்நரை, கருஞ்செவ்வா, ராப்போரு இதுக மட்டும் கண்ணவிட்டு தூர போகாம பார்த்துக்கோ என்னய்யா’’ என்றார் ஆடுகளின் வகைகளைச் சொல்லி…ஆடுகளை மேய்ச்சலுக்காக சீவலப்பேரி காட்டுக்கு ஓட்டிச் சென்றார் பாலகன் மாசானம். ஒரு நாள் சீவலப்பேரி ஊருக்கு மேற்கு மூன்று ஒன்றாய் கலக்கும் பகுதியான முக்கூடல் என்னும் இடத்தில், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் பாலகன் மாசானம். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் கூட்டத்தை சின்னஞ்சிறு பாலகன் மாசானம், அடிக்காமலும், அதட்டாமலும் உரிமையுடன் அழைப்பது, அவற்றை கொஞ்சுவது என ஆடுகளோடு பழகுவதை கண்ட ஒரு சாமியார், அவனிடம் சென்று குழந்தாய், எனக்கு நல்ல பசியாக இருக்கிறது. உண்பதற்கு உன்னிடம் எதாவது இருந்தால் கொடு என்றார். காவி உடையும், காலில் ஆணிகள் பொருத்தப்பட்ட செருப்பும், கையில் திருவோடும் கொண்டு, உயரமான தோற்றமும் அதற்கேற்ற அகன்ற உடல்வாகும் கொண்டு, நரைத்த தாடியுடன் நிமிர்ந்த நிலையில் நின்றிருந்த அந்த சாமியாரைக் கண்டான் மாசானம்.மலட்டு ஆட்டில் பால் `சாமி, உங்களுக்கு கொடுக்கத்தக்க கையில் ஒண்ணுமில்லே, நான் வீட்லயிருந்த கொண்டாந்த சோள கஞ்சிய இப்பதேன் குடிச்சு முடிச்சேன்’’ என்றான் மாசானம். “பரவாயில்லை, ஏதாவது ஒரு ஆட்டிடம் இருந்து பாலை கறந்து கொடு, நான் குடித்து பசியாறிக் கொள்கிறேன்’’ என்றார் சாமியார். “சாமி, முக்காவாசி ஆடு, சினை ஆடுதேன். ஈத்தளஞ்ச ஆடுகள்கிட்டயும் இப்ப எப்படி பால கறக்க, என்று பாலகன் கூறிய போது, அவர் அருகே நின்ற அடிச்செவ்வாடு (ஆட்டின் அடிவயிற்றில் மட்டும் சிவப்பு நிறம் இருக்கும்) ஆட்டை காட்டி, இந்த ஆட்டில் இருந்து பாலைக் கறந்து கொடு என்றார். அந்த சாமியார்.அப்போது, மாசானம் சத்தமாக சிரித்தான். “சாமி அது மலட்டு ஆடு, அதுல போய் எப்படி சாமி பால கறக்கிறது’’? என்று கூறி, மீண்டும் சிரித்தான் மாசானம். இறுகிய முகத்தோடு, “குழந்தாய், நான் சொல்வதை நீ கேள், அந்த ஆட்டில் பால் வரும், இந்தா, இந்த திருவோட்டில் பாலைக் கறந்து கொடு’’ என்று தன் கையில் இருந்த திருவோட்டினை கொடுக்க, தயக்கத்துடன் வாங்கினான் மாசானம். அந்த மலட்டு ஆட்டின் மடியில் பாலைக் கறக்க முயன்றார். பால் வந்தது. திருவோடு நிரம்பியது. வியந்தான் மாசானம், அந்த சாமியாரை வியப்போடு பார்த்த படியே எழுந்தான். மாசானத்தின் கையிலிருந்த திருவோட்டை வாங்கி பாலை அருந்திய சாமியார், தனது சுயரூபத்தை காட்டினார். வந்திருந்தது சுடலைமாடன். கம்பீரமான தோற்றம், கனிவான சிரிப்பு. “ மாசானம்… உன் இடம் தேடி வந்த எனக்கு கோயில் எழுப்பி, பூஜித்து வா…’’ என்றார். “ஐயா, வயதில் இளையவன், பருவத்தில் சிறியவன் என்னால் என்ன செய்ய முடியும்’’? என்றான் மாசானம். “உன்னோடு நானிருக்கிறேன். உன்னால் முடியும்’’ என்றார் சுடலைமாடன். “சாமி, அப்படியே செய்கிறேன். எனது தலைமுறைக்கும் காத்து நிக்கணும், நோய் வராம பாதுகாக்கணும்’’ என்று கூறினான். (இதை செய்யுளாக அதாவது பிறக்கும் பிறக்கும் பிள்ளைக்கும் என பாடலாய் பாடி கேட்டதாக கூறப்படுகிறது.) உடனே சுடலைமாடன், எனக்கு கோயில் கட்டி, நான் சொல்கிற என்னோடு நிலையம் கொடுத்து பூஜித்துவா, உன் தலைமுறையை காத்து நிற்பேன், குலம் சிறக்க வைப்பேன், ஊர் மக்களை காப்பேன், நோய், நொடி அண்டாமல் பாப்பேன். என்னை நம்பி, உன்னை தேடி வருவோருக்கு எப்பிணியாகினும், அப்பொழுதே நீக்கி வைப்பேன். என்று வாக்குறுதி கொடுத்த சுடலைமாடன், தான் நின்றிருந்த இடத்தில் கீழேயிருந்த மண்ணை எடுத்து தன் விரலை தொட்டு, அதை கொண்டு மாசானத்தின் நாவில் `ஓம்’ என்று எழுதினார்.மாசானம், வாலகுருசன்னியாசியாக மாறுவது மாலைப் பொழுதானது. ஆடுகளை கிடையில் அடைத்துக் கொண்டு தனது உறவினர்களிடமும், ஊரார்களிடமும் நடந்ததை கூறினான் மாசானம். எல்லோரும் கேலி பேசினர். இவரது பேச்சை பொருட்டாக நினைக்கவில்லை. சுடலைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்று வேதனைப்பட்டான் மாசானம். அங்கிருந்து புறப்பட்டு, கால்போன போக்கில் பயணித்தான். சதுரகிரிமலை சென்றான். அங்கு சித்தர்கள் பலர் இருக்க, அங்கிருந்த ஒரு ரிஷியை குருவாகக்கொண்டு, அவருக்கு தொண்டுகளை செய்து வந்தான். வேதங்களை கற்றறிருந்தான். ரிஷியை காணவரும் அன்பர்கள், அவரை குரு என்று அழைப்பதை போன்று, சீடனாக இருக்கும் பாலகனை, பாலகுரு என்று அழைத்தனர். தலைமை குருவாக இருந்த அந்த ரிஷியிடம் நாடி வரும் அன்பர்கள், தங்களுக்கு நேரும் இன்னல்களை எடுத்துக்கூறும் போது, ரிஷி பதில் கூற, சிறிதுநேரம் மௌனமாக இருப்பார். சிறிது நேரம் கழித்தே பதில் கூறுவார். ஆனால், சுடலையின் அருளால் மாசானக்கோனார், ரிஷிக்கு முன்னதாக பதில் கூறிவிடுவார். இதனால் இவரை அங்கிருந்த முனிவர்கள், `தலை இருக்க வால் ஆடலாமா’? என்று கண்டித்தனர். குரு பதில் கூறும் முன்னே, இவர் பதில் கூறியதால் வால் என்று நகைப்புக்காக கூறியதால், இவர் பெயரே வாலகுருவாக மாறியது. 21 வயதை எட்டிய வாலகுரு சன்னியாசி, காசிக்கு பயணம் மேற்கொண்டார். தனது 24 வயதில், சொந்த ஊரான சீவலப்பேரிக்கு வந்தார். சுடலைமாடனை நோக்கி வேண்டினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சுடலை ஈசன், நாளை காலை சூரிய உதயத்திற்கு பின், மூவாற்றங்கரையில் நான் லிங்கமாக தோன்றியிருப்பேன் என்றார்.எந்த இடத்தில் சுடலை, தரை மண் எடுத்து வாலகுரு சன்னியாசியின் நாவில் `ஓம்’ என்று எழுதினாரோ, அந்த இடத்தின் மேற்கு பக்கம், தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையோரம், சித்திரை மாதம் முதல் நாள், சுடலைமாடன் சுயம்புவாக, லிங்கமாக தோன்றினார். அன்றிரவும், வாலகுரு சன்னியாசியின் கனவில் தோன்றிய சுடலைமாடன். முறுக்கு மீசை முகத்தோடும், வீச்சருவா கரத்தோடும் தனது உருவத்தை காட்டினார். இதே உருவத்தில், தனக்கு சிலை வடிவம் இட்டு வணங்கி வர கூறினார். அதன்படியே சுடலைமாடனுக்கு, வாலகுரு சன்னியாசி கோயில் கட்டினார். வாலகுரு சன்னியாசி நீண்ட சடைமுடியுடனும், காவி ஆடையுடனும் இருந்ததால், அவ்வூர் மக்கள் இவரை வாலகுரு சன்னியாசி என்று அழைத்து வந்தனர். வாலகுரு சன்னியாசி, சுடலைக்கு பூஜை செய்து வந்தார். அவர் சொன்ன வாக்கு பலித்தது. குப்பக்குறிச்சியை சொந்த ஊராகக் கொண்ட வாலகுரு சன்னியாசி, சீவலப்பேரியிலே வீடு கட்டி தங்கலானார். ஒரு வெள்ளிக்கிழமை உச்சி கால பூஜையில் அசரீரியாக சுடலைமாடன், வாலகுரு சன்னியாசியிடத்தில் பேசினார்.முன் பிறந்த முண்டனுக்கும் – அவன்பின் பிறந்த பேச்சிக்கும் – என்னைதில்லையில் ஆதரித்த தாயானஎல்லைக்காரி பிரம்ம சக்திக்கும்துணையாக வழியில் வந்தபுதியவனுக்கும் எனக்குஇணையாக என் கோட்டையில்பூஜிக்க நிலையம் கொடு என்றார்.அப்போது வாலகுரு சன்னியாசி கூறினார்,பணம் படைத்தவன் பலரிருக்கபலம் படைத்தவன் சிலரிருக்கஎன்னை அழித்துவிட்டுஉன்னை அபகரித்துவிடக்கூடாதே என்றதற்குபிறக்கும் பிறக்கும் பிள்ளைக்கும்கறக்கும் கன்றுக்கும் – நீ கறந்து கொடுத்த பாலுக்கும் சத்தியமாகசந்திரன் சூரியன் உள்ளவரைஎனது புகழ் மாறாது உனது சந்ததி அழியாது காத்து நிப்பேன். என் கோட்டை படியை கழுவி படித்துறையில் நீ இருந்தால் நான் படியளப்பேன்நீ சொன்னது பலிக்கும்நீ கொடுக்கும் மண்ணும் மருந்தாகும் என்றார்.சுடலைமாடன் சொன்னபடி வாலகுரு சன்னியாசி சொன்ன வாக்கு நடந்தேறியதுசுடுகாட்டு மண்ணும் மருந்தானதுசுற்று வட்டாரம் பெயரானதுசுடலையின் சக்தி உடனிருந்தது.மயான பூமிவாலகுரு சன்னியாசி மறைவுக்கு பின் அவருக்கு, அவர் வாழ்ந்த வீட்டில் அவரது திருமேனி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், லிங்கம் வைத்து கோயிலாகக் கட்டினர் என்று கூறப்படுகிறது. இது வாலகுருசாமி கோயில் என்றும், சன்னியாசிக்கோயில் என்றும், போத்தி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தை மாதம் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுடலைக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாள் கொடை விழா நடக்கிறது. அதற்கு முந்தையநாள் பங்குனி கடைசி நாளன்று போத்தி கோயிலில் பூஜை செய்து, அங்கிருந்து அவரைக் கோயிலுக்கு அழைத்து வருவதாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.சுடலைமாடன், மாசானத்துக்கு நாவில் `ஓம்’ எழுத மண் எடுத்த இடம் மயான பூமியானது. அங்கிருந்துதான் மண் எடுத்து வந்து கோயிலில் திருநீறாக கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை டிராக்டர் கொண்டு மயானக் கரையில் தோண்டி திருநீறு மண் அள்ளப்படுகிறது. சுமார் 600 ஆண்டுகளாக மண் அள்ளப்பட்டும், அங்கு எந்தப் பள்ளமும் இன்னும் ஏற்படவில்லை. மண்ணெடுக்க தோண்டிய சில நாட்களிலேயே அந்த இடம் இயல்பாக சமப்படுத்தப்படுகிறது. எல்லாம் சுடலையின் அற்புதம் என்கிறார்கள், சீவலப்பேரி மக்கள்.இந்த திருநீறு மண்ணைப் பூசினால், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள், பலன்பெற்றவர்கள்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi