கரூர், ஆக. 19: கரூர் மாவ ட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தெரு நாய்கள் நடமாட்டம் காரணமாக மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.கரூர் தாந்தோணிமலையில் நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம் என அடுத்தடுத்து முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இதில், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் ஆகியவற்றை மையப்படுத்தி அதிகளவு தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இநத நாய்களின் நடமாட்டம் காரணமாக இந்த வளாக பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட மிகவும் அஞ்சி வருகின்றனர்.
ஒரு சில சமயங்களில் இந்த பகுதியின் வழியாக செல்பவர்களை நாய்கள் விரட்டி மிரட்டும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.எனவே, கலெக்டர் அலுவலக வளாகத்தை மையப்படுத்தி சுற்றித்திரியும் தெரு நாய்களை இந்த பகுதியில் இருந்து அப்புறபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.