திருத்தணி, ஜூலை 22: திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. . இதனால், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சி மேதினபுரம் கிராமத்தில் வீடுகளுக்கு அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இதனால், தெருவில் நடந்து சென்று வர கிராமமக்கள், குழந்தைகள் அவதி அடைந்துள்ளார். மேலும், பல நாட்களாக மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.