திருவாடானை, செப்.20: திருவாடானை அருகே தெருநாய் கடித்து 16 பேர் காயமடைந்தனர். திருவாடானை அருகே குஞ்சம்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி, ஆரோக்கியதாஸ், புஷ்பம், கீழக்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆசைதம்பி, சூச்சனி கிராமத்தைச் சேர்ந்த ராமு, கம்பெனிகரையகோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், வெளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த பூரணம் உள்பட 16 பேர் நேற்று தெருநாய் கடித்து காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 5 பேருக்கு அதிக காயம் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குஞ்சம்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி கூறுகையில், எங்களை கடித்த தெரு நாய்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை விட்டு வைக்க வாய்ப்பில்லை. எங்களால் சமாளிக்க முடியாத நிலையில் குழந்தைகள் எப்படி சமாளிக்க முடியும். தெருக்களில் நடமாட அச்சமாக உள்ளது. எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.