மதுரை, ஆக. 26: தெருநாய்கள், பூனைகளால் மக்கள் துன்பத்திற்கு ஆளாவதை தடுக்கும் வகையில், அவற்றை தத்தெடுக்கும் முகாம் மதுரையில் நேற்று நடந்தது. தெரு நாய்களால் மக்கள் துன்பப்படுவதை தவிர்க்கும் முயற்சியாக், மதுரையில் தெரு நாய்கள் மற்றும் பூனைகள் தத்தெடுக்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 2வது மதுரை பைபாஸ் ரோட்டில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்ப்பதற்காக நாய்கள், பூனைகள் மற்றும் அவற்றின் குட்டிகளை தத்தெடுத்து சென்றனர்.
தெருக்களில் ஆதரவற்று சுற்றும் நாய்களின் எண்ணிக்கை பெருகி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை தடுப்பதுடன், நாய் குட்டிகள் வாகனங்களில் சிக்கி இறப்பதை தவிர்க்கும் வகையில் வள்ளலார் உதவும் கரங்கள் அமைப்பினர் இதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். தெருநாய்களை, அவற்றின் குட்டிகளை, பூனைகளை சேகரித்து வளர்க்க விரும்புவோருக்கு வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறும்போது, ‘‘தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் துன்பத்தை, நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையிலும், நாய், பூனை குட்டிகளை காக்கும் வகையிலும் இந்த தத்தெடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முறையாக தெருநாய்களை, குட்டிகளை தேர்வு செய்து, அவற்றிற்கு சிகிச்சை, உணவு வழங்கி, தேவை இருப்போருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்’’ என்றனர்.