திருவொற்றியூர், செப். 19: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (39). இவரது மனைவி செண்பக. இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ளனர். கடந்த 14ம் தேதி குடும்பத்துடன் திருவொற்றியூர் மார்க்கெட் அருகில் உள்ள மாமியார் வீட்டுக்கு செல்வகுமார் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ₹35 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுபற்றி செல்வகுமார் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஏற்கனவே பல திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையனான சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (30), திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாலகிஷ்ணனை சுற்றி வளைத்து கைது செய்தனர். சம்பவத்தன்று இரவு பாலகிருஷ்ணன், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் திருவொற்றியூர் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு மது அருந்திய பாலகிருஷ்ணன், தனது நண்பர்களை அனுப்பிவிட்டு எல்லையம்மன் கோயில் அருகே உள்ள கடற்கரையில் உறங்கியுள்ளார். பின்னர் மறுநாள் எல்லையம்மன் கோயில் தெரு அருகே பல பகுதிகளில் தெருத்தெருவாக சுற்றி திரிந்துள்ளார். மதியம் 3 மணிக்கு வழக்கறிஞர் செல்வகுமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட அவர், பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
திருடிய நகையை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு மாநகராட்சி கட்டிடம் அருகே மறைத்து வைத்துவிட்டு, பணத்தை வைத்து மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பாலகிருஷ்ணனுடன் தண்டையார்பேட்டை பகுதிக்குச் சென்ற போலீசார் நகையை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.