கரூர், ஜூன் 26: கரூர் திருச்சி சாலையில் தெரசா கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை திரும்பவும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி சாலையில் சுங்ககேட் பகுதியை தாண்டியதும் தெரசா கார்னர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து திருச்சி, கரூர், பசுபதிபாளையம், கருப்பக்கவுண்டன்புதுர் ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிகிறது.
இந்த பகுதியை சுற்றிலும் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்றவை உள்ளன. மேலும், இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பிரிவுச் சாலையில் வாகனங்கள் எளிதாக பிரிந்து செல்லும் சூழல் இல்லாமல் உள்ளது., இதனால், அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த குறிப்பிட்ட நேரமாவது இந்த சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரசா கார்னர் பகுதியை பார்வையிட்டு சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.