கூடலூர், ஜூன் 16: தேனி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரப் பகுதிகளில் மொச்சை, கம்பு, தட்டை, சோளம் மற்றும் எள் உள்ளிட்ட மானாவாரி விவசாய பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகிறது. பாசன வசதி இல்லாத வானம் பார்த்த நிலங்களில் இத்தகைய விவசாயிகள் பருவ கால நிலையை அனுசரித்து பயிரிடப்பட்டு வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து பயிரிடப்பட்டிருந்த மொச்சை, எள் போன்ற விவசாய பயிர்கள் தொடர்ந்து ஓரளவு மழை பெய்து வருவதால் நன்கு விளைந்திருக்கின்றன. கூடலூர் அடுத்துள்ள ஏகலூத்து, பெருமாள் கோவில் ஒட்டி உள்ள பகுதிகளில் அதிகமான இடங்களில் எள் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலை கண்டுள்ளது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.