திசையன்விளை, ஆக.18: தூத்துக்குடி மறைமாவட்டம் தென்மண்டலம் சார்பில் கவுசானல் விளையாட்டு கழகம் வடக்கன்குளத்தில் துவக்கப்பட்டது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு செல்வஜார்ஜ், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு மார்ட்டின் முன்னிலை வகித்தனர். அருட்தந்தையர்கள் வெனி இளங்குமரன், நெல்சன் பால்ராஜ், ஜோசப் ஸ்டாலின், பால் ரோமன், ஜேசுராஜ், ஜஸ்டின், சர்ச்சில், ஜாண்பிரிட்டோ, ரூபர்ட் கலந்துகொண்டனர்.
துவக்க விழாவை முன்னிட்டு மறைமாவட்ட தென்மண்டல பங்குகளுக்கு இடையேயான காலிறுதி கைப்பந்து போட்டி கடந்த 11ம் தேதி சாத்தான்குளம் மறைவட்டம், வடக்கன்குளம் மறைவட்டம் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் திசையன்விளை, கடகுளம், தட்டார்மடம், செட்டிவிளை, பொத்தக்காலன்விளை, சவேரியார்புரம், பிரகாசபுரம் பங்குகள் கலந்து கொண்டன. இதில் திசையன்விளை அணியும், தட்டார்மடம் அணியும் வெற்றி பெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. வடக்கன்குளம் மறைவட்டம் சார்பில் தெற்கு கள்ளிகுளத்தில் போட்டிகள் நடந்தது.
இதில் புஷ்பவனம், வள்ளியூர், அழகப்பபுரம், பணகுடி, கிழவநேரி, காவல்கிணறு, வடக்கன்குளம் அணிகள் கலந்து கொண்டன. இதில் தெற்கு கள்ளிகுளம் அணியும், வடக்கன்குளம் அணியும் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த அரை இறுதிப் போட்டியில் வடக்கன்குளம் அணியும், திசையன்விளை அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் வடக்கன்குளம் அணி முதல் இடத்தையும், திசையன்விளை அணி 2ம் இடத்தையும் வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ஆயர் ஸ்டீபன் பரிசு கோப்பை வழங்கினார். போட்டியில் 2ம் இடம் பெற்ற திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல இளைஞர்களை திருத்தல அதிபர் அந்தோனி டக்ளஸ், பங்குப்பேரவையினர் மற்றும் இறைமக்கள் பாராட்டினர்.