சின்னமனூர், ஜூன் 4: தென்னங்கன்று நடவு முறைக்கு ஈட்டியிலை கன்றுகளை தேர்வு செய்வது சிறந்தது என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு, சின்னமனூர், கூடலூர் பகுதிகளில் தென்னை வளர்ப்பு அதிகளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் தென்னங்கன்று நடவுமுறை குறித்து வேளாண் துறையினர் தெரிவித்துள்ளதாவது: தென்னங்கன்றுகளை நடவு செய்யும் போது 6 முதல் 12 மாதமுள்ள கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். கழுத்து பகுதி நன்கு பருமனாக இருக்க வேண்டும். ஈட்டியிலை கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். பூச்சி, நோய் தாக்காத கன்றுகளை தேர்வு செய்தல் வேண்டும். 25-25 என்ற இடைவெளியில் 3-3-3 என்ற வீதத்தில் குழிகள் தோண்ட வேண்டும். ஓரக்கால்களில் நடவு செய்ய 20 அடி இடைவெளி போதுமானதாகும். குழிகளில் 2 அடி உயரத்திற்கு மக்கிய தொழு உரம், செம்மண் மற்றும் மணலை சமமான விகிதத்தில் கலந்து நிரப்ப வேண்டும்.
குழியின் நடுவே மண் கலவையை எடுத்து விட்டு வேர்கள் அனைத்தையும் நீக்கி விட்டு தென்னங்கன்றுகளை நட வேண்டும். தென்னங்கன்றின் அடிப்பாகமான தேங்காய் மண்ணில் நன்கு புதையும்படி வைத்து காலால் அழுத்தி விட வேண்டும். நட்ட கன்றுகளுக்கு பின்னிய தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு நிழல் அமைத்து தர வேண்டும். தென்னங்கன்றுகளை சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும். நடவு செய்யப்பட்ட கன்று காற்றில் சாய்ந்து விடாமல் இருக்க பக்கவாட்டில் குச்சி வைத்து கட்டிவிட வேண்டும். வருடந்தோறும் வட்டபாத்தியை அகலப்படுத்த வேண்டும். வட்டபாத்திகளில் பயறு வகைகள், சணப்பை, கொழுஞ்சி போன்றவற்றை விதைத்து மடக்கி உழுதல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.