திருப்பூர், ஜூன் 23: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், மீன் மார்க்கெட், வெங்காயம் மண்டி, தக்காளி குடோன் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இவைகளில் பொருட்களை வாங்கவும் விற்கவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாத நிலை இருந்து வந்தது. ஆங்காங்கே நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் பகுதியில் தக்காளி குடோன் செயல்படும் இடத்திற்கு பின்புறமாக இருந்த பள்ளங்கள் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் மூலம் ஜேசிபி இயந்திரம் கொண்டு மட்டம் செய்யும் பணி நடைபெற்றது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களை மண்ணால் மூடி சமதளப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன் மூலம் ஏராளமான வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையில் இட வசதி கிடைக்கும் என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.