வலங்கைமான், ஜூன் 28: வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏழு மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். இதில் லோகேஷ்குமார் 480/500, அட்சயா 467/500, ஜனனிஸ்ரீதேவி 442/500, ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
மேலும் இரண்டு மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். அது போல பள்ளிப் புத்தாக்க சிந்தனைகள் செயல் திட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சாதுப்பிரியன், மூர்த்தி, நித்திஷ் குமார், ஜனார்த்தனன், திவ்யந்த் ஆகியோர் அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி வழிகாட்டுதலின்படி தயாரித்திருந்த ‘தூசி இல்லாத துடைப்பான் திட்டம்’ தேசிய அளவில் சிறந்த யோசனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களைப் பாராட்டி பரிசளிக்கும் வகையில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார், சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார் முன்னிலை வகித்தார். கும்பகோணம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பிரபாகரன், தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலர் விஸ்வநாராயண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.
மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் இளையராஜா, விஜயகுமாரி, ரேணுகா, சுதா, அலுவலர்கள், மற்றும் மிட் டவுன் ரோட்டரி சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.