Monday, June 5, 2023
Home » தென்குடித்திட்டை எனும் குருத்தலம்

தென்குடித்திட்டை எனும் குருத்தலம்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் மெலட்டூர் திருக்கருகாவூர் சாலையில், திட்டை என்னும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் இத்தலத்தில் ஒருபதிகம் பாடப்பெற்றுள்ளதால், இச்சிவாலயம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டதாகும். திருஞானசம்பந்தர்,“மன்னு மாகாவிரி வந்து அடிவருட நல்செந்நெல் ஆர்வளவயல் தென்குடித் திட்டையே”“எண்இல் ஆர்எழில் மணிக்கனக மாளிகை இளம்தெண்நிலா விரிதரும் தென்குடித் திட்டையே”“காலொடும் கனகமூக்கு உடன்வரக் கயல்வரால்சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே”“ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடிதொழச்சீர் அணங்கும் புகழ்த் தென்குடித் திட்டையே”“தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித் திட்டை”என்றெல்லாம் அவ்வூரின் இயற்கை வளத்தையும் எழிலார் சிறப்பையும் தம் தேவாரப் பாக்களில் எடுத்துரைத்துள்ளார். தென்குடித் திட்டை என்பதே இவ்வூரின் பழம் பெயராகும். காவிரியின் கிளைநதிகளான வெண்ணாறு, வெட்டாறு (முள்ளியாறு) ஆகியவற்றின் இடையே திட்டாக இவ்வூர் அமைந்தமையால் திட்டை எனப் பெயர் பெற்றது.பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பெற்று இருள் கவ்விக் கிடந்த காலத்தில் பரம்பொருளின் பேரருளால் பெரிய திட்டு ஒன்று நீர் நடுவே தோன்றி, அங்கு ஜோதி வடிவமாக ஈசன் எழுந்தருள மீண்டும் சிருஷ்டியால் இவ்வுலகம் தோற்றம் பெற்றது என ஸ்காந்தம் போன்ற புராண நூல்கள் எடுத்துரைக்கின்றன. அத்திட்டே திட்டை என்னும் இத்திருத்தலமாகும்.தென்குடித் திட்டை, குடித்வீபம் என அழைக்கப் பெற்ற இத்தலத்தில் வசிஷ்டர், தேவர், பைரவர், முருகன், பிரம்மன், திருமால், காமதேனு, ஆதிசேடன் ஆகியோர் வழிபட்டனர் என்று புராணங்கள் உரைக்கின்றன. சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ‘ரதபுரி’ என்றும், ‘தேரூர்’ என்றும் இவ்வூருக்கு நாமகரணங்கள் உண்டு. காமதேனு வழிபட்டதால் ‘தேனுபுரி’ என்றும் அழைக்கப்படலாயிற்று.சோழப் பேரரசன் இராஜராஜசோழன் காலத்தில், சோழமண்டலம் பல வளநாடுகளாகப் பகுக்கப்பெற்றது. அதில் ஒரு வளநாடு நித்தவிநோத வளநாடாகும். நித்த விநோதன் என்பது இராஜராஜனின் பட்டப்பெயராகும். அந்நித்தவிநோத வளநாட்டில் பல கூற்றங்களும், நாடுகளும் உட்பிரிவுகளாகத் திகழ்ந்தன. அவற்றுள் ஒரு கூற்றமே கிழார் கூற்றமாகும். வெண்ணாற்றுக்கும் வெட்டாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் அமைந்த இக்கூற்றத்தில்தான் தென்குடித்திட்டை இடம்பெற்றுத் திகழ்கிறது.சோழப்பேரரசர்கள் காலத்தில் சிறந்ததோர் கற்றளியாக இவ்வாலயம் விளங்கிற்று. இறை வனின் நாமங்களாக வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர் என்ற பெயர்கள் விளங்குகின்றன. உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களநாயகி, சுகந்தகுந்தளாம்பிகை என்ற பெயர்கள் இறைவியின் திருநாமங்களாகும். இத்தலத்திற்குரிய தலமரம் சண்பகமாகும். தலத் தீர்த்தங்களாக சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்பவை விளங்குகின்றன.கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயில், திருமதில்களுடன் விளங்குகின்றது. மூன்று நிலை இராஜகோபுரம் துவார வாயிலாக அமைய, மூலவர், அம்மன் சந்நதிகள் பரிவார தெய்வங்களின் ஆலயங்கள் சூழ அமைந்துள்ளன. குரு பகவானுக்கென்று தனித்த ஆலயம் உள்ளதும், குரு பரிகாரத் தலமாக அது விளங்குவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். முன் மண்டபத்தில் வலப்பால் நால்வர் வடிவங்களும், மறுபுறத் தூணில் ரிஷபாருடர் உருவமும் உள்ளன. எதிரில் பின்னாளில், இவ்வாலயத்துக்குத் திருப்பணி செய்த நகரத்துச் செட்டியார் உருவும், அவர் மனைவியின் உருவும் சிற்பங்களாக உள்ளன.கொடிமரம் கருங்கல்லால் ஆனது. திருநீற்றுக்கோயிலும் அங்குள்ளது. பலிபீடம் நந்தி அமைய அருகே அம்மன் சந்நதி தெற்கு நோக்கியவாறு திகழ்கின்றது. அம்மன் சந்நதிக்கு வெளியே மண்டபத்து விதானத்தில் பன்னிரு ராசிகளின் உருவங்கள் உள்ளன. அவற்றின்கீழ் நின்றவாறு ஈசனையும் அம்பிகையையும் தரிசிப்பவர்களுக்கு கோள்களின் தீவினை அகலும் என்பது நம்பிக்கையாகும். குருபகவான் சந்நதியை அடுத்து, துவார விநாயகரும் மறுபுறம் கந்தக்கடவுளும் அருள்பாலிக்கின்றனர். எல்லா விமானங்களும் கருங்கல்லால் ஆனவையாகும். உள்வாயில் வழியே வரும்போது சூரியன், விநாயகர் சந்நதிகளைத் தரிசிக்கலாம். அடுத்து பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, நடராசர் சந்நதிகள் உள்ளன. நவகிரக சந்நதியும் தனியே அமைந்துள்ளது.மூலவர் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுர ஆவுடையாருடன் சிவலிங்கத் திருமேனி விளங்குகின்றது. முன்புறம் செம்பினாலான நந்தி அமைந்துள்ளது. மூலவர் திருமேனி சுயம்புவாகும். திருமேனி மீது வரிக்கோடுகளைக் காணலாம். கருவறையின் மேற்புறம் அமைந்த பிரமந்திரக் கல்லிலிருந்து சிவலிங்கத் திருமேனி மீது 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை நீர் சொட்டுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அக்கல்லினை சந்திரகாந்தக்கல் என்பர்.கோஷ்ட மூர்த்திகளாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். இவை பழமையான சோழர் காலத் திருமேனிகளாகும். சண்டேஸ்வரருக்கெனத் தனிச் சந்நதியுள்ளது.1933 – 34ஆம் ஆண்டு களில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கல்வெட்டுத் துறையினர் எண். 150, 151, 152 என மூன்று கல்வெட்டுச் சாசனத் தொகுப்புகளை இவ்வாலயத்திலிருந்து படி எடுத்து பதிவு செய்துள்ளனர்.சிவாலயத்துத் தெற்குச் சுவரில் காணப்பெற்ற துண்டுக் கல்வெட்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரனின் பெயருடன் பஞ்சாங்கக் குறிப்புகள் மட்டும் காணப்பெற்றன. அக்குறிப்புகளை ஆராய்ந்த வல்லுநர்கள் அது முதல் அல்லது இரண்டாம் மாறவர்மன் குலசேகரனின் கல்லெழுத்துச் சாசனம் என்றும், அதில் குறிக்கப்பெற்றுள்ள பஞ்சாங்கக் குறிப்பு கி.பி. 1272 பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதியான சனிக்கிழமையையோ சுட்டுவது எனக் கணக்கிட்டுள்ளனர். எப்படி இருப்பினும் பாண்டிய மன்னன் குலசேகரன் காலத்திய கொடை இவ்வாலயத்துக்கு இருந்துள்ளது என்பது தெளிவு.இந்த சாசனத்தில் நித்தவிநோதவளநாட்டு மாத்தூர் ஊர்ச்சபை பற்றியும், ஊர் மகாஜனங்கள் பற்றியும் குறிப்பு இருப்பதால், இக்கோயிலுக்குரிய நிலங்கள் அவ்வூரில் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.இந்த சாசனத்தின் அருகில் உள்ள மற்றொரு துண்டுக் கல்லில் திட்டை என்னும் இவ்வூர் “தேரினார்” எனப்பெறும் இவ்வாலயத்து இறைவனுக்கு உரியதாகும் என்ற குறிப்பு காணப்பெறுகின்றது. சிவபெருமான் தேரேறிச் சென்று திரிபுர தகனம் செய்தவர் என்பதால் அவருக்கு “தேரினார்” என்ற பெயருண்டு. மேலும், திட்டைக்குரிய பெயராக “தேரூர்”, “ரதபுரி” என்பவை திகழ்ந்தன என்பதை அறியலாம்.இந்த சாசனத்தின் அருகே உள்ள மற்றொரு துண்டுக் கல்லில் அங்கு திகழும் கிணறு முகுந்தன் உடைய பெற்ற நாயன் என்பவரின் கொடை என்று எழுதப்பெற்றுள்ளது. இம்மூன்று பதிவுகளும் எண். 150-ல் இடம்பெற்றுள்ளன. வெளிமண்டபத்தின் வலப்புறம் இடம்பெற்றுள்ள சாசனத்தில் அங்குள்ள மண்டபச் சுவர் உடையார் சேதிராயர் என்பவரின் கொடை எனக் குறிக்கப் பெற்றுள்ளது. வெளிமண்டபத்துத் தூணில் இடம்பெற்ற கல்வெட்டில் 13 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி காணப்பெறுகின்றது.எதிரிலா வீரர், சத்துருக்காலன் போன்ற விருதுப் பெயர்களையுடையவரும், பெருங்கோளூர் குலோத்துங்கச் சோளீஸ்வரம் எனும் கோயிலின் அதிகாரியுமான ஒருவரின் கொடையால் அமைந்ததே அம்மண்டபம் என்ற செய்திகள் இச்சாசனத்தில் உள்ளன. இதே மண்டபத்தின் மற்றொரு தூணில் காணப்பெறும் கல்வெட்டுச் சாசனத்தில், பெருங்கோளூர் ஊரவர் தங்கள் தேவதான நிலத்துப் பாடி காவல் வருவாயிலிருந்து இக்கோயிலின் திருப்பணிகளுக்காக அளிக்கப்பெற்ற கொடை பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது.கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்திலும், பின் சோழப் பேரரசர்கள் காலத்திலும், பாண்டியர்கள் காலத்திலும், விஜயநகர நாயக்கர் காலத்திலும் ஏற்றம் பெற்றுத் திகழ்ந்த தென்குடித் திட்டை சிவாலயத்தை பின்னாளில் நகரத்தார் திருப்பணி செய்தனர். வரலாற்றுப் பெருமை மிக்க இவ்வாலயத்தையும், தீர்த்தக் குளத்தையும் திருப்பணிகள் செய்து காப்பது அவசியமானதாகும்.முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi