ஊட்டி,ஆக.26: கோத்தகிரி அருகே தெங்குமரஹாடா அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு தேர்தல் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இரண்டு ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மாவட்ட கலெக்டர் உத்தரவு படி பள்ளி மேலாண்மை மாவட்ட அதிகாரிகள் வழிகாட்டுதல் படி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியபிரியா மேற்பார்வையில் கோத்தகிரி அருகேயுள்ள தெங்குமரஹாடா (கெத்தைப்பட்டி) அரசு உயர்நிலைப் பள்ளியில் மறுகட்டமைப்பு தேர்தல் நடந்தது.
இதில் ஆசிரியர் பிரதிநிதி,தலைமையாசிரியர்,பெற்றோர்,இல்லம் தேடி கல்வி பணியாளர்,கல்வியாளர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோரை கொண்ட 24 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக அம்பிகா,துணை தலைவராக ரவிக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். மாநில திட்ட அலுவலகம் மூலம் சிறப்பு மேற்பார்வையாளராக வீரப்பன் கலந்து கொண்டார். பள்ளி தலைமையாசிரியர் வினோதினி இத்தேர்தல் அவசியம் நோக்கம் குறித்து விளக்கினர். இதில் தெங்குமரஹாடா ஊராட்சி துணை தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர் கனகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.