நாகர்கோவில், மே 24: தெங்கம்புதூர், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சிவகோபன், ஜெபமணி, குமரேசன், பவிதா, சொர்ணம் மற்றும் ரத்தினம் நாடார், சுரேஷ் ஆகியோர் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் தெங்கம்புதூர், ஆலங்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இரண்டு மதுபானக்கடை உள்ளது. தெங்கம்புதூர் மதுபானக்கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மாணவர்கள் மதுக்கடையை கடந்து பள்ளிக்கு வருவதும் பின் வீடுகளுக்கு செல்வதுமாக உள்ளனர். அதுபோன்று ஆலங்கோட்டை மதுபானக்கடை முக்கிய சந்திப்பில் உள்ளது.
இதன் அருகில் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள். பள்ளி கூடங்கள், அரசு நிறுவனங்கள், கோவில் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் பேருத்துகளுக்காக அதிகமான பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மதுபானக்கடைகளுக்கு மது வாங்க வரும் மதுப்பிரியர்களின் செயல் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மதுப்பிரியர்கள் ரகளையில் ஈடுபடுவது. தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற அசிங்கமான செயல்களால் கல்லூரி மாணவிகள், பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே தெங்கம்புதூர், ஆலங்கோட்டையில் உள்ள 2 மதுபானக்கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.