பாலக்கோடு, ஆக. 20: பாலக்கோடு பேரூராட்சி மற்றும் அரசு மருத்துமனை சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நேற்று பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் முரளி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேஷன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் 192 தூய்மை பணியாளர்களுக்கு மார்பகப் புற்றுநோய். ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, இசிஜி, கர்ப்பபை நோய் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கினர். முகாமில், பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி, செவிலியர்கள், மருத்துவர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் டார்த்தி, கோமதி, ஆயிஷா, தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.