கோவை, செப்.5: தணிக்கை பத்திகள் மீதான துறை சார்ந்த ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் 7 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.1.89 லட்சத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைப்புக்கான இணைய வழி பட்டாக்கள், சாலை விபத்தில் மரணம் அடைந்த 10 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் என ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண நிதிக்கான காசோலை, தாட்கோ சார்பில் ரூ. 19 லட்சம் மாநிலத்தில் 5 பயனாளிகளுக்கு லோடு ஆட்டோ, சுற்றுலா வாகனங்களுக்கான கடன் உதவி,தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 7 தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் தலா ரூ.1.89 லட்சம் மதிப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் வழங்கினார்.
முன்னதாக, கோவை மாவட்ட டைட்டில் பார்க் பூங்காவில் உள்ள நவீன வசதிகள் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் பணி விவரங்கள் குறித்தும், டைட்டில் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் தமிழக அரசு போக்குவரத்து கழக சங்கம் கிளை 2ல் பேருந்துகளின் எண்ணிக்கை, பேருந்துகளின் சேவை, தொழிலாளர்களின் எண்ணிக்கை தானியங்கி இயந்திரம் மூலம் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணிகளை குறித்தும் சௌந்தர பாண்டியன் மற்றும் அவரது குழுவினர் கேட்டறிந்தனர்.
இதையடுத்து சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு 52 கோடி மதிப்பில் ஒக்கனம் குறிச்சி குளத்தின் கரையினை பலப்படுத்தி சீரமைக்கும் பணியையும், ரூ. 116 கோடி மதிப்பீட்டில் வாலாங்குளம் புனரமைக்கும் பணிகளையும், செல்வபுரம் புட்டு விக்கியில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காற்று காப்பிடப்பட்ட துணை மின் நிலையம் கோவை பச்சா பாளையத்தில் உள்ள கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், பால் குளிரூட்டும் அறை, கருவிகள் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை இக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களாகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது (மணப்பாறை) உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை) கிரி (செங்கம்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி), செந்தில்குமார் (பழனி) பிரகாஷ் (ஓசூர்), துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.