தேனி: பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து இன்று புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 2024-2025ம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்ததையடுத்து, கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து, தற்போது 2025-2026ம் கல்வியாண்டு துவங்கியுள்ளதையடுத்து, இன்று (ஜூன் 2ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த இரு நாட்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமாக கடந்த இரு நாட்களாகதங்களுக்கு தேவையான பள்ளிச் சீருடைகளை வாங்குவதற்காகவும், புத்தகப் பைகள், சீருடை அணிகலன்கள் மற்றும் எழுது பொருள்கள் வாங்குவதற்காக தேனி நகர் எடமால் தெரு, பகவதி அம்மன்கோயில் தெரு, மதுரை சாலையில் உள்ள கடைகளுக்கு சென்று ஆர்வமாக பொருள்களை வாங்கி மகிழ்ந்தனர்.