உடுமலை, ஆக.24: உடுமலை அருகே உள்ள புக்குளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் 320 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் உடுமலை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 43 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, முதல்கட்டமாக 27 தூய்மைப் பணியாளர்களுக்கு வீட்டு சாவி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் பாலமுருகன் முன்னிலையில், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் தலைமையில் வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணியாளர்களுக்கு வீட்டின் சாவி வழங்கப்பட்டது. உதவி பொறியாளர் சர்மிளாதேவி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.