நித்திரவிளை, செப்.1: சாகர் பரிக்கிரமா யாத்ரா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் வந்த ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தூத்தூர் பகுதியில் மீனவ மக்களிடம் கலந்துரையாடல் செய்தார். தூத்தூர் புனித தோமையர் திருமண மண்டபத்தில் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மீனவ மக்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்தூர் பங்கு தந்தை பிரடி சாலமன் தலைமை வகித்தார். தூத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏ. வி. எம். கால்வாய் சீரமைப்பு, இடப்பாடு ரோட்டை சரிசெய்வது, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, மீனவர்கள் கடலில் இறந்து 12 வருடங்கள் முடிந்தும் இறப்பு சான்றிதழ் கொடுக்காமல் இருப்பது, தூத்தூரில் லைட் ஹவுஸ் அமைக்கவும், மேலும் இப்பகுதியில் கடற்கரையில் நேர்கல் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய மீன் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவிடம் அனைத்து கிராமங்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.
கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு அமைச்சர் பொது மக்களிடம் பேசும் போது, உங்கள் கோரிக்கைகள் நியாயமான ஒன்று. இது சம்பந்தமாக மிகவிரைவாக நடவடிக்கைகள் எடுக்க எனது துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது மீன் வளத்துறை இணை அமைச்சர் முருகன், எம் ஆர் காந்தி எம்எல்ஏ, பா ஜ க மாவட்ட தலைவர் தர்மராஜ், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் சதீஷ் ராஜா, பாரதிய ஜனதா மீனவர் பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம்,மீனவர் அணி மாவட்ட தலைவர் ஆன்றணி மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.