தூத்துக்குடி, செப். 20: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாபெரும் கடன் மேளா, இன்று நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாபெரும் கடன் மேளா இன்று (20ம்தேதி) நடைபெறுகிறது. சிறு வணிகக் கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்குவதற்காக இந்த கடன் மேளா நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறும் இந்த கடன் மேளாவில் பொதுமக்கள், சிறு வணிகர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகி பயன்பெறலாம். இத்தகவலை தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர், இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா தெரிவித்துள்ளார்.