தூத்துக்குடி,மே 23: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்திருக்கும் மறுசுழற்சி கழிவுகள் சேகரிக்கும் ஆர்ஆர்ஆர் மையத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார். பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்கள், பாத்திரங்கள், ஆடைகள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 22 இடங்களில் தேவையற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்தல், வாங்கிய பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் என்பதன் அடிப்படையில் ஆர்ஆர்ஆர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்திருக்கும் ஆர்ஆர்ஆர் மையத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கழிவாக வீணாவதை குறைத்து, மறுபயன்பாட்டிற்கும் மறுசுழற்சிக்கும் பிரித்தளிக்கும் இந்த மையத்தில், தேவை உள்ளவர்கள் தங்களுக்கான பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத்தவிர்க்கும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 22 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையங்களை தூத்துக்குடி மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.