தூத்துக்குடி,ஆக 26: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை பகுதிகளில் ரோந்து செல்ல ரவுடிதடுப்பு பிரிவுக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் அரசு மருத்துவ கல்லூரி டீன் சிவக்குமார், தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி சைலஸ்ஜெபமணி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது எஸ்பி ஆல்பர்ட் ஜான் பேசுகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவற்றின் பாதுகாப்புத்தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்தும், ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் கூடுதலாக ரவுடிதடுப்பு பிரிவு போலீசார் ரோந்து செல்லுமாறு உத்தரவிட்டார். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் கூடுதலாக காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு டவுன் ஏஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.