தூத்துக்குடி, அக். 5: தூத்துக்குடி தாலுகா சிலுவைப்பட்டி, திருச்செந்தூர் தாலுகா சிங்கித்துறை, ஓட்டப்பிடாரம் தாலுகா தருவைகுளம் ஆகிய 3 கடற்கரை கிராமங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிலுவைப்பட்டி கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் கடலில் தத்தளிப்போரை எவ்வாறு விரைந்து மீட்பது, மேலும் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது குறித்து தீயணைப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, கடலோர பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீஸ் துறையினர், தீயணைப்பு துறையினர், வட்டார போக்குவரத்து துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் பங்கேற்றனர்.ஒத்திகை நிகழ்ச்சிக்கு டிஆர்ஓ அஜய் சீனிவாசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ், தாசில்தார் பிரபாகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.