தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான எஸ்.கே.பிரபாகர், பின்னர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படக் கூடிய சூழலில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்பது, நீர்நிலைகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யவும், முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும், தீயணைப்பு மீட்பு பணியினர் ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், மீட்பு பணிகளுக்கு உதவும் மர அறுவை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், டிஆர்ஓ அஜய் சீனிவாசன் பங்கேற்றனர்.