தூத்துக்குடி, மே 25: தூத்துக்குடியில் நாளை (26ம்தேதி) பனைமர தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு குறித்து சமக தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பனை தொழிலாளர்கள் மாநாடு குறித்து சமத்துவ மக்கள் கழகத்தின் தென்மண்டல ஆலோசனை கூட்டம் நாளை (26ம் தேதி) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் தூத்துக்குடி விவிடி ரோட்டில் உள்ள எஸ்.டி.ஆர் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வரவேற்று பேசுகிறார். மாநில நிர்வாகிகள் காமராசு, ஜெபராஜ் டேவிட், அந்தோணி பிச்சை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தென் மாவட்ட பகுதியில் உள்ள சமக மாவட்ட செயலாளர்கள் மாநாடு குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூற உள்ளனர். இக்கூட்டத்தில் பனைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு வாழ்வாதாரம் குறித்தும், ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளன. மாநில பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர், துணைத்தலைவர் நிப்பான் தனுஷ்கோடி, பொருளாளர் கண்ணன், தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பதால் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாநிலத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் கேட்டுக் கொண்டுள்ளார்.