தூத்துக்குடி, அக். 6: தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலைகளின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில் ஆக்கிரமிக்கும் வாகனங்களால் ஏற்படும் சிரமத்தை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய சாலைகளின் இருபுறமும் உள்ள நடைபாதைகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. இதன்படி தூத்துக்குடி- பாளை. மெயின் ரோடு, தமிழ்சாலை, வஉசி சாலை, ஜெயராஜ் ரோடு, தேவர்புரம் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, கடற்கரை சாலை, வி.இ.ரோடு உள்பட பல முக்கிய பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் உள்ள நடைபாதைகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த நடைபாதைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாதபடி இருசக்கரம், 4 சக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் தற்போது ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று தெரிவித்தனர். அதன் பின்னர் இந்த ஆக்கிரமிப்புகள் சற்று குறைந்தது. ஆனால் நாளடைவில் மீண்டும் பழையபடி வாகனங்கள் நடைபாதைகளை ஆக்கிரமிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில் வாகனங்கள் ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.