தூத்துக்குடி, ஜூன் 24: தூத்துக்குடியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 38 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கருங் குளம் ஊராட்சி ஒன்றியம் சேரகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் பணியாற்றி பணியிடைக் காலமான சத்துணவு பணியாளரின் வாரிசுதாரரான செல்வராணி என்பவருக்கு கருணை அடிப்படையில் அமைப்பாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.